உலக தரத்திலான புதிய துணை நகரம் அமைப்பதற்கான விரிவான வளர்ச்சி திட்டத்தை உருவாக்க, சி.எம்.டி.ஏ.,வுக்கு அதிகாரம் வழங்கி, தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. சென்னையில் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் வளர்ச்சி மற்றும் புறநகரில் ஏற்பட்டு வரும், கட்டற்ற வளர்ச்சியை முறைப்படுத்தும் வகையில், மூன்று இடங்களில், துணை நகரங்கள் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

அரசு நடவடிக்கை : இதற்காக, வண்டலூர் -கேளம்பாக்கம் இடையிலான பகுதிகளை கையகப்படுத்தி, தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம் மூலம், துணை நகரம் அமைப்பது தொடர்பான அறிவிப்பு, 2006ம் ஆண்டு வெளியிடப்பட்டது. அந்த பகுதியில் வசிக்கும் மக்கள் மற்றும் விவசாயிகள் எதிர்ப்பு காரணமாக இத்திட்டம் நிறுத்தி வைக்கப்பட்டது. இதன் பின், வண்டலூர்- கேளம்பாக்கம், மறைமலை நகர்- திருப்போரூர் இடையிலான பகுதிகளில் ஏற்பட்டு வரும் வளர்ச்சி குறித்து ஆய்வு செய்து, அப்பகுதிகளை மேம்படுத்த எடுக்க வேண்டிய நடவடிக்கை தொடர்பான பரிந்துரைகள் அளிக்க, தலைமை செயலர், சி.எம்.டி.ஏ., துணை தலைவர் ஆகியோரைக் கொண்ட உயர் நிலைக்குழு, 2007ம் ஆண்டு அமைக்கப்பட்டது. இக்குழு, 2008ம் ஆண்டு அளித்த பரிந்துரைகளின் அடிப்படையில் வண்டலூர் - கேளம்பாக்கம் சாலைக்கும் மறைமலை நகர்- திருப்போரூர் இடையிலான பகுதிகளை உலக தரத்திலான புதிய நகரமாக உருவாக்க அரசு முடிவு செய்துள்ளது.

சி.எம்.டி.ஏ.,வுக்கு உத்தரவு : இது குறித்து நகர்ப்புற வளர்ச்சித் துறை உயரதிகாரி ஒருவர் கூறியதாவது:
புதிய நகரத்தை உருவாக்குவது தொடர்பான சாத்தியக்கூறு அறிக்கை அளிக்க, நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சர் தலைமையில் மேம்பாட்டு திட்டக்குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவின் இடைக்கால அறிக்கையின் அடிப்படையில், உலக தரத்திலான புதிய நகரத்தை உருவாக்குவதற்கான பணிகளை மேற்கொள்ளும் பொறுப்பு, சி.எம்.டி.ஏ.,விடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. மேலும், இப்பகுதிகளுக்கான ஒருங்கிணைந்த வரைவு வளர்ச்சி திட்டத்தை தயாரித்து அளிக்குமாறு சி.எம்.டி.ஏ.,வின் பரப்பு வளர்ச்சிப்பிரிவு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது. இதில் பல்வேறு பகுதிகள் மாவட்ட நகரமைப்பு எல்லைக்குள் வருவதால், சி.எம்.டி.ஏ.,வுக்கு அதிகாரம் அளித்து அரசாணை பிறப்பிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.

சிக்கல் : இது குறித்து, சி.எம்.டி.ஏ., உயரதிகாரி ஒருவர் கூறுகையில், "அரசு உத்தரவுப்படி, உத்தேச வரைவு வளர்ச்சி திட்டம் உருவாக்க தேவையான பணியாளர்கள் பற்றாக்குறை காரணமாக, இதற்கான பணிகள் துவங்குவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது' என்றார்.

எந்தெந்த பகுதிகள்?

புதிய துணை நகரத்தில் இடம் பெரும் பகுதிகள் விபரம்:
* மறைமலை நகர் நகராட்சி
* கூடுவாஞ்சேரி- நந்திவரம் பேரூராட்சி
* திருப்போரூர் பேரூராட்சி
* காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றியம்
* திருப்போரூர் ஊராட்சி ஒன்றியம்
* வருவாய் கிராமங்கள்: 134
* மொத்த பரப்பு: 562 சதுர கி.மீ.,


நான்கு எல்லைகள் :

புதிய துணை நகரத்தின் நான்கு எல்லைகள் விவரம்:
* வடக்கு: வண்டலூர் - கேளம்பாக்கம் சாலை
* தெற்கு: மறைமலை நகர் - திருப்போரூர் சாலை
* கிழக்கு: கிழக்கு கடற்கரை சாலை
* மேற்கு: ஜி.எஸ்.டி., சாலை
Read more
Reply
25 Replies
Sort by :Filter by :
No replies found.